பரப்புரை

எந்தவிதமான சேவை வழங்கலாக இருந்தாலும் அவற்றை அந்தந்த நேரத்து மனநிலை, பணநிலை மற்றும் வளவாளர்களின் மட்டுப்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்காது அவற்றை சேவை வழங்க வேண்டியவர்களின் தேவை அறிந்து, பொருத்தமான சேவைகளை ஒழுங்குபடுத்தி, உச்சப் பயனைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு வடிவமைத்து வழங்குதலே சிறந்ததொரு அணுகுமுறையாக இருக்கும்.

ஓட்டிசம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைமைகளும், அவற்றினுடைய பல்பரிமாணத் தன்மை, அவற்றிற்குரிய பலவிதமான இடையீடுகள், நீண்டகாலத்துக்குச் சேவை வழங்க வேண்டிய தேவை என்னும் முக்கியமான காரணங்களினால் ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் ஒன்றிணைந்ததான அணுகுமுறையினைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஓட்டிசத்திற்கான ஒன்றிணைந்த சேவைகளை வழங்குவதில் பல திணைக்களங்கள் இணைந்து பங்காற்ற வேண்டியிருக்கின்றது. அத்துடன் ஓட்டிசம் என்பதன் தனித்துவமான தன்மையைப் புரிந்து கொண்டு, ஓட்டிசம் உடையவர்களையும் சகமனிதர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களோடிணைந்ததான இயல்பானதோர் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் ஊரும், உறவும், அயலும், சுற்றமும், சமூகமும், நாடும் நிறையவே பங்களிப்புச் செய்ய வேண்டியிருக்கின்றது.

இது ஓர் இரவிலோ அல்லது ஓரிரு வருடங்களிலோ நடைபெற்றுவிடப் போவதில்லை. இதனை அடைவதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

அதற்காக நாம் நிறையவே வேலை செய்ய வேண்டியிருக்கின்றது.