ஓட்டிசத்திற்கான ஒரு கொள்கையின் அவசியம்

Dr. ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்

ஓட்டிசம் நிலைமையானது உலகெங்கணும்போல் எமது நாட்டிலும் தற்பொழுது அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எமது மாகாணத்திலும் ஓட்டிசம் உடைய பல பிள்ளைகள் வைத்திய நிபுணர்களினாலும், ஆசிரியர்களாலும், மற்றும் இந்நிலைமை பற்றிய விழிப்புணர்வுடைய பெற்றோராலும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். எமது மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோர் ஓட்டிச இயல்புகளை உடையவர்களாக இருக்கிறார்கள் எனும் புள்ளிவிபரங்கள் எம்மிடம்; இல்லை. ஆயினும், அது பல நூறுகளாக இருக்கலாம் எனவே நிபுணர்களால் கணிப்பிடப்படுகின்றது. முக்கியமாக இந்நிலைமை இனிவருங்காலங்களில் இன்னமும் அதிகரித்துக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓட்டிசம் எனும் நிலைமை பிள்ளையின் மூளைவிருத்தி தொடர்பான பிரச்சினைகளையும் சவால்களையும் கொண்டிருப்பதனால், அந்த நிலைமையை நேரகாலத்திற்கே அடையாளங்கண்டு, தகுந்த இடையீடுகளை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆயினும், எவ்வளவு வேளைக்கு அடையாளங் காண்பது? யார் அடையாளங் காண்பது? எப்படி அடையாளங் காண்பது? ஓட்டிசம் இருக்கின்றது என அடையாளங் கண்ட பின்பு எவ்வாறான இடையீடுகளை மேற்கொள்வது? இதில் சுகாதாரத் துறையினரது பங்கு என்ன? கல்விப் புலத்தின் கடப்பாடு என்ன? இந்தப் பிள்ளைகள் வளர்ந்ததன் பின்பு அவர்கள் தமது சூழலோடு இணைந்து கொண்டு கௌரவமான ஒரு வாழ்வைக் கொண்டு செல்வதற்கு ஒரு சமூகமாக எவ்வாறு உதவலாம்? இந்தப் படிமுறையில் சமூக சேவைகள். பொருளாதார அபிவிருத்தி தொடர்பான துறைகள், மற்றும் தொழிற் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தொழில் வழங்குநர்கள் எவ்வாறு உதவலாம்? ஓட்டிசம் நிலைமையுடைய பிள்ளைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு தேவையேற்படுகின்ற பட்சத்தில் எவ்வாறான வலுவூட்டல்கள் மற்றும் உதவிகளை வழங்கலாம்? ….. போன்ற பல விடயங்கள் பற்றி இதுவரை எம்மிடத்தில் தெளிவான பார்வைகளோ, ஒருமித்த கருத்துகளோ இருக்கவில்லை. பெரும் யானையொன்றின் பல்வேறு பகுதிகளைப் பார்த்து, அப்பகுதிகளையே யானையின் உருவம் என நினைத்தவர்கள்போல் நாம் இருக்கின்றோமோ? எனும் ஓர் ஐயம் ஏற்படுகின்றது.
இந்தப் பின்னணியில், ஓட்டிசம் தொடர்பான எமது மாகாணத்துக்கான கொள்கை ஒன்றினை உருவாக்க வேண்டிய ஒரு தேவை எழுந்துள்ளது. எமது மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் சார்ந்த இரண்டு அமைச்சுக்கள் ஏனைய பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களின் பங்களிப்போடு இந்தக் கொள்கை வகுப்பின் ஆரம்பப் படிநிலைகளைப் பூர்த்தி செய்திருக்கின்றோம்.
தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள வடமாகாணத்திற்கான ஓட்டிசம் கொள்கை அறிக்கையின் வரைபானது கூட்டு முயற்சி ஒன்றின் உச்சவிளைவாக அமைந்திருக்கின்றது. இதனை உருவாக்குவதில் எமது மாகாணத்தைச் சேர்ந்த பல திணைக்களங்களின் பிரதிநிதிகளும், துறைசார் நிபுணர்களும், ஆர்வலர்களும், பெற்றோரும் மட்டுமல்லாது, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஏனைய பல வளவாளர்களும் தமது பங்களிப்புகளை நல்கியுள்ளார்கள். இவர்களது கருத்துக்களோடு, இலங்கைளின் தேசிய மட்டக் கொள்கைகளும், உலகின் பல நாடுகளில் இருக்கும் கொள்கைகளும் ஆராயப்பட்டு, அவற்றில் உள்ள நடைமுறைச் சாத்தியமான நல்ல கருத்துக்கள் பலவும் உள்வாங்கப்பட்டடு இந்தக் கொள்ளை அறிக்கையின் வரைபு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கொள்கையினை உருவாக்கிய வளவாளர்கள் பல தடவைகள் தம்முள் கூடிக் கதைத்தார்கள். வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். மீண்டும், மீண்டும் திருத்தங்களை மேற்கொண்டு கொள்கையின் வரைபைச் செழுமைப்படுத்தினார்கள். இந்த வரைபை எழுத்துருவாக்குவதிலும், அதனை மொழிபெயர்ப்பதிலும் பலர் தன்னார்வத்தோடு தம்பணி நல்கியிருந்தார்கள். காலத்தின் தேவை கருதி இவர்கள் அனைவரும் ஆற்றிய பணிகளை வெறுமனே “நன்றி” என்று சொல்லி நலிவாக்கிவிட நான் விரும்பவில்லை.
நான் இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூறியாக வேண்டும். இந்தக் கொள்கையை கல்வி, சுகாதாரம் எனும் இரண்டு அமைச்சுக்கள் சேர்ந்து வெளியிடுவது பொருத்தமானது என இந்தக் கொள்கை வரைபினை ஆக்கியவர்கள் கருதுகிறார்கள். இதுபற்றியும் நாம் சேர்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. ஓட்டிசம தொடர்பான இந்தக் கொள்கை வரைபானது
கற்றறிந்தோர், பொறுப்புடையோர், ஆர்வலர்கள் என்போரதும், பொதுமக்களினதும் கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்தப்பட்டு, அதற்கான சட்ட அங்கீகாரம் கிடைக்கப்பெற வேண்டும். பின்பு இந்தக் கொள்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை எவ்வாறு இணைந்து நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான பொறிமுறை ஒன்றினை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.